கறவைகள் பின் சென்று - TPV28
திருப்பாவையின் 28வது பாசுரம்
சென்ற பாசுரத்தில் (கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!) கோபியர், ஆபரணங்கள், ஆடைகள், பால் சோறு போன்றவற்றைக் கண்ணனிடம் கேட்டதால், அம்மாயவன், "நீங்கள் அழியக்கூடிய சிற்றின்பங்களை என்னிடம் வேண்டுவது போல் தோன்றுகிறதே" என்று புன்னகைக்க, கோபியர் அதற்கு பதிலாக, தங்களது உள்ளார்ந்த விருப்பம், கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து எப்போதும் அவன் உடன் இருப்பதே என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது சிறப்பு !
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
பொருளுரை:
பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் (ஆயர்) குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!
உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக !
பாசுரச் சிறப்பு:
"கோவிந்தா"வில் வரும் "கோ" என்பதற்கு பூமி, புலன், சொர்க்கம், மோட்சம், பசு, வேதம் என்று பல பொருள்கள் உள்ளன. கோவிந்தன் இவை அத்தனைக்கும் அதிபதி, அவற்றை அருள வல்லவன்.
திருவேங்கடம், சிதம்பரம், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற 3 திவ்ய தேசங்களில் பரமன் கோவிந்தன் என்ற திருநாமம் பெற்றிருக்கிறான் என்பது குறிப்பிட வேண்டியது.
சரணாகதித்துவத்தின் பெருமையை இப்பாசுரம் சொல்வதை விட அருமையாக விளக்க முடியாது.
கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை கோபியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது. "இறைவா" என்ற (முதன்முறையாக ஆண்டாள் பயன்படுத்தும்) சொல்லாட்சியைக் கவனிக்கவும்! "இன்னும் என்ன செய்தால் என்னை ஏற்றுக் கொள்வாய்?" என்று கண்ணனிடம் வேண்டுகிறாள்!
வைணவ ஆச்சார்யர்களின் சம்பந்தம் ஏதும் இல்லாததால், தங்களுக்கு பகவத் விஷய ஞானம் இல்லை என்பதையும் "அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து" என்று சொல்லி ஒப்புக் கொள்கின்றனர். தாங்கள் பசுக்களை மேய்க்கும் சிறுதொழில் செய்து வாழ்பவர்கள் என்றும், ஆதலால் பகவத்-பாகவத சேவை என்று பெரிதாக எதுவும் செய்யாதவர்கள் என்றும் கூட கண்ணனிடம் மனம் விட்டுச் சொல்கின்றனர்!
"நீ யாதவ மணியாக எங்கள் குலத்தில் அவதரித்தது மட்டுமே நாங்கள் பெற்ற ஒரே பெரும்பேறு, அதனாலேயே நாங்கள் பெரும் புண்ணியம் பெற்றவராகி விட்டதாக நினைக்கிறோம். மற்றபடி, நாங்கள் செய்த எதுவும் புண்ணியத்தில் சேராது. உனது அருமை பெருமைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்குத் திறனில்லை. தகுதியுமில்லை. ஆனாலும், நீ ஒருவனே குற்றமற்றவன், குறையற்றவன் என்ற ஒரு விஷயத்தை எப்படியோ உணர்ந்து கொண்டோம், திடமாக நம்பினோம்!
உன்னோடான எங்கள் உறவு மட்டுமே அழிவில்லாதது என்பதை புரிந்து கொண்டு விட்டோம். உன்னை எங்களில் ஒருவராக எண்ணி, அன்பின் காரணமாக உண்டான சுவாதீனத்தால் (உரிமையால்) மட்டுமே, உனக்குத் தர வேண்டிய மரியாதையைத் தராமல் இருந்திருக்கிறோம். உன்னையே கேலி செய்திருக்கிறோம்! அவை தவறு என்று கூட பேதைகளான நாங்கள் உணர்ந்ததில்லை, உன்னிடம் மன்னிப்பும் கேட்டதில்லை. ஆனால் உன் மேல் கொண்ட பேரன்பும் பரமபக்தியும் என்றும் மாறாது.
எங்கள் அறியாமையால், உன்னைச் சரணடைவதே கதி என்பது புரிய எங்களுக்கு இத்தனை காலமாகி விட்டது! எங்கள் கர்ம ஞான பக்தியில் குறைவிருக்கலாம். ஆனால், உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்!
பரமனைப் பற்ற அடியவருக்கு வேண்டியது பேரன்பு மட்டுமே, பக்தியும், ஞானமும், வழிபாட்டு முறையைப் பேணும் சம்பிரதாயமும் கூட அவ்வளவு முக்கியமில்லை என்பதை ஆண்டாள் அருமையாக உணர்த்தியுள்ளாள்!
பாசுர உள்ளுரை:
1. இப்பாசுரத்தில் கோபியர்
ஆகிஞ்சன்யம் (கை முதல் இல்லாமை, பரமன் ஒருவனே உபாயம் என்ற உணர்தல்) இல்லாத (கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்),
நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு) அறியாத (அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து),
பரமனின் சௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன்) புரியாத போதும் வரமருளப்பட்ட (உந்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்),
பரத்துவம் விளங்காத (குறைவொன்று மில்லாத கோவிந்தா!),
ஜீவாத்மா-பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தம் பற்றிய அதிக ஞானமில்லாவிட்டாலும் கண்ணனின் உறவே நிரந்தரம் என்பது மட்டும் புரிந்த (உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது),
தாங்கள் செய்த தீவினையின் பலன்களை விலக்க பரமனிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்பது கூட உணராவிட்டாலும் அவனை நாடி வந்த (அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறியருளாதே),
கண்ணன் ஒருவனே உலக ரட்சகன், சரணாகதிக்கு வேண்டியதையும் அவனாலேயே அருள முடியும் போன்றவை விளங்காவிட்டலும், அவன் திருவடிகளே காப்பு என்ற நம்பிக்கையுடன் வந்த (இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்)
பரமபக்தி கொண்ட பேதைகளாக தங்கள் குணநலங்களை குறிப்பில் உணர்த்துகின்றனர்.
2. இப்பாசுரத்தில் கோபியர் மூன்று முறை, பேரன்பில் கண்ணனை விளிக்கின்றனர். அதாவது,
உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே
3. "உன்றன்னோடு உறவு" -- பரம்பொருளுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவு 9 வகைப்பட்டது. அவை
தந்தை - மகவு
ரட்சிப்பவன் - ரட்சிக்கத்தக்கவன்
உரிமையுள்ளவன் - உரிமையாகும் பொருள்
தாங்குபவன் - தாங்கப்படத் தக்கவன்
அறியப்படுபவன் - அறிபவன்
பொருளுடையான் - பொருள்
தாங்கும் பொருள் - தாங்கப்படும் பொருள்
சரீரி (சூட்சமம்) - சரீரம் (ஸ்தூலம்)
அனுபவிப்பவன் - அனுபவிக்கப்படுவது
4. குறையொன்றும் இல்லாத கோவிந்தா - பெருமாளின் குணபூர்த்தியை உணர்த்துகிறது
5. இப்பாசுரத்தில் த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் வெளிப்பட்டுள்ளது ! அதாவது, அடியார்கள் (பரமனைச் சேர) தாங்கள் செய்யவிருப்பதை பெருமாளிடம் தெரிவிப்பதைக் குறிக்கிறது.
6. நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய் - மோட்ச சித்தியைப் பெற்று பகவத் கைங்கர்யம் செய்ய விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 282 ***
9 மறுமொழிகள்:
Test comment !
நல்ல பதிவு பாலா!
27, 28, 29 இம்மூன்று பாசுரங்களிலும் ஒரு விசேடம்! ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை!
கறவைகள் பின் சென்று என்னும் இந்த 28 பாசுரத்திலும் கோவிந்தா என்று விளிக்கிறாள் ஆண்டாள்! இப்படி பறையை நேரடியாகக் கேட்டுப் பெறும் மூன்று பாடல்களிலும் கோவிந்த நாமத்தைச் சொல்லியே கேட்கின்றாள்!
//அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே//
முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகப்பெருமான் என்று அருணகிரி வாக்கு!
ஆனால் அருணகிரிக்கு முன்பாகவே ஆண்டாள் இதைச் சொல்லி விடுகிறாள் பாருங்கள்! = சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே!
//உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது//
ஒழித்தாலும் ஒழியாதாம்!
யார் ஒழிப்பார்கள்? வாழ்வின் இன்ப துன்பங்கள், ஊழ்வினை, விதி, இல்லை இறைவனே வந்து ஒழித்தாலும் ஒழியாது, அவனோடு கொண்ட உறவு!
அதனால் தான் விதியால் தாங்கள் ஆய்க்குலத்தில் பிறந்தாலும், எங்கோ காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாலும், இந்த உறவுக்காகவே அவனும் ஆய்க்குலத்துக்கு வரவேண்டியது ஆனது!
விதி சதி செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி...இந்த உறவில் மட்டும் யாரும் எதுவும் செய்ய முடியாது! எப்படியாவது அவனைக் கொண்டு வந்து சேர்த்து விடும்!
இப்படி ஆனது இந்த உறவு!
இதைத் தான் ஏழேழ் பிறவிக்கும் தொடர அடுத்த பாசுரத்தில் வேண்டுகிறாள்!
கண்ணபிரான்,
2 பின்னூட்டங்களுக்கும் நன்றி :)
//கறவைகள் பின் சென்று என்னும் இந்த 28 பாசுரத்திலும் கோவிந்தா என்று விளிக்கிறாள் ஆண்டாள்! இப்படி பறையை நேரடியாகக் கேட்டுப் பெறும் மூன்று பாடல்களிலும் கோவிந்த நாமத்தைச் சொல்லியே கேட்கின்றாள்!
//
மிகச் சரி, கோவிந்த நாம சங்கீர்த்தனம் -- கோவிந்தா கோவிந்தா கோவிந்தா !!!
பகவத் சம்பந்தத்தை அழகாக விளக்கி உள்ளீர்கள்.
பதிவுக்கு நன்றி ...
பாலா,
தாங்கள் விளம்பரம் தருமுன்பே இந்தப் பதிவைப் பார்த்து விட்டேன். நல்ல விளக்கங்கள். அழகு கொஞ்சும் அந்தப் படங்கள் மிக அருமை. கோதையைச் சின்னப் பெண் வடிவில் வரைந்த ஓவியனின் பாவம் (bhaavam) அழகியது..
"சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே.." என்று இப்பாசுரத்தில் வருவது போலவே கீதையில் 2 அழகான சுலோகங்கள் உள்ளன. என்னே பக்தி பாவத்தில் உள்ள ஒற்றுமை !
கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கண்ட அர்ஜுனன், பகவானது மாஹாத்ம்ய சக்தியை நேரடியாகக் கண்டதும் தழுதழுத்துச் சொல்ல்லும் துதியில் நடுவில் இந்த சுலோகம் வருகிறது..
"ஏய் கிருஷ்ணா! அடே யாதவா ! நண்பா" என்றெல்லாம் நண்பன் என்ற உரிமையில் விளையாடும்போதும், சாப்பிடும்போதும், கூட இருக்கையிலும் உன்னைப் பெயரிட்டு அழைத்திருக்கிறேன்.. இறைவா ! உன் மகத்தான சக்தியை அறியாமல் அவ்வாறு செய்துவிட்டேன். அதைப் பொறுத்து நீ அருள வேண்டும்"
அத்தியாயம் 11, விஷ்வரூப தர்சன யோகம்.
சுலோகம் 41
sakhe 'ti matva Prasabham yad uktam
he krishna he yadava he sakhe 'ti
ajanata mahimanam tave 'dam
maya pramadat pranayena va 'pi
சுலோகம் 42
yach chi 'vahasartham asatkrito 'ti
vihara sayyasana bhojaneshu
eko 'thava 'py achyuta tatsamaksham
tat kshamaye tvam aham aprameyam
ஜடாயு,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
கீதோபதேசத்திலிருந்து ஸ்லோகங்களை எடுத்திட்டு விளக்கியமைக்கு இன்னொரு நன்றி !
சமஸ்கிருதம் கற்றவரா தாங்கள் ?
எ.அ.பாலா
**********************************
Test !
நல்ல பதிவு. நிறைய விசயங்கள்.
//பரமனைப் பற்ற அடியவருக்கு வேண்டியது பேரன்பு மட்டுமே//
:)
Post a Comment